கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்- 9 பேர் கைது
- இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
- ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் கோவிந்தபேரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் சேரன்மகாதேவி, களக்காடு, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் அமர்ந்து செல்போனில் பிரீ-பயர் கேம் விளையாடி உள்ளனர்.
அப்போது ஒரு தரப்பு மாணவருக்கும் மற்றொரு தரப்பு மாணவருக்கும் விளையாட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
உடனே ஒரு தரப்பு மாணவர் அவரது ஊரில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட எதிர் தரப்பு மாணவரை தாக்குவதற்காக கல்லூரி அருகே உள்ள பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த மாணவருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 9 பேரை இன்று கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் அடங்குவர். தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.