உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 29-ந்தேதி ஆர்ப்பாட்டம்-முத்தரசன்

Published On 2024-07-21 04:42 GMT   |   Update On 2024-07-21 04:42 GMT
  • தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
  • குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

மாஞ்சோலை தேயிலை தோட்டம், மின்கட்டண உயர்வு, வேலை உறுதித்திட்டம், மத்திய அரசின் குற்றவியல் சட்டம் குறித்து 4 நாள் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு என்பது மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி வரும் ஜூலை 29-ந் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.

வேலை உறுதி திட்டத்தில் 4 மாத காலமாக வேலையும், ஊதியுமும் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வழங்கப்பட வில்லை என்றால் வேலை உறுதி அளிப்பு சட்டப்படி பாதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு இதற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காமல், வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டம் தனியார் வசம் தான் உள்ளது. 2028-ம் ஆண்டு வரை தனியார் வசம் தான் இருக்கும். ஆனால் அதற்குள் தொழிலா ளர்களை வெளியேற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

உயர் நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் வெளியேற்ற கூடாது என்று கூறி உள்ளது. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News