நெல்லை மாநகராட்சி 16-வது வார்டில் கழிவு நீர் ஓடைக்கு காங்கிரீட் மூடி அமைக்க வேண்டும்- மேயரிடம் பொதுமக்கள் மனு
- அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது.
- எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
கழிவுநீரோடை
நெல்லை மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்டது பேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெரு. இந்த தெருவில் கிழக்கு பகுதியில் அகலமான கழிவு நீரோடை உள்ளது. ஆனால் அதனை மூடி போட்டு மூடாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே அந்த பகுதியில் காங்கிரீட் மூடி அமைத்து சுகாதார சீர்கேடு இல்லாமல் பாதுகாத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிராஜா தலைமையில் வட்ட செயலாளர்கள் வீரராகவன், தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, இசக்கியப்பன், சுப்புராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.
பூங்கா
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 54- வது வார்டு தியாகராஜ நகர் எல்.ஐ.சி காலனியில் அமைந்துள்ள பூங்காவில் வேலைகள் முடிந்து இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறுவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், விளையாடவும் பயன்படுத்திக் கொள்ள விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இந்த கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.