உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் ஆடை குறித்து கண்டக்டர் சர்ச்சை பேச்சு

Published On 2023-05-18 09:43 GMT   |   Update On 2023-05-18 09:43 GMT
  • பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
  • கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

சூலூர்,

கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டு வந்தது. காங்கேயம் பஸ் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அந்த பஸ்சில் ஏறினார். பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனது கல்லூரி பஸ்நிறுத்தத்தில் இறங்குவதற்காக அவர் டிக்கெட் எடுத்தார்.

பஸ் பல்லடம் அருகே வந்தபோது, அதில் பணியாற்றிய கண்டக்டர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். அவர் மாணவியின் ஆடை குறித்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததுடன் கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

பஸ் பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சை போலீஸ்நிலையத்துக்கு திருப்பி கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக அவர்கள் போலீசாரிடம் மனுவாகவும் எழுதிக் கொடுத்தனர்.

சம்பந்தப்பட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர். கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கண்டக்டரிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் சூலூர் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News