மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: 22 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
- போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
- ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.
அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.