கூடலூர், பந்தலூரில் தொடர்ந்து கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.
இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அப்பர் பவானி-72,
சேரங்கோடு-39,
ஓவேலி-28,
பந்தலூர், நடுவட்டம்-22,
பாடந்தொரை-18,
செருமுள்ளி-16.