நெல்லை மாவட்டத்தில் நாளை 2,012 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
- நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்
தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,012 மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர 102 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.