உள்ளூர் செய்திகள்

விளைநிலங்களில் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம்: பொதுக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2023-07-26 03:22 GMT   |   Update On 2023-07-26 05:05 GMT
  • 35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நிலங்களை சமன் படுத்தும் பணி தொடக்கம்
  • அறுவடைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் நெற்பயிர்கள் அழிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க மையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இன்று காலை சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இங்குள்ள விவசாய நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 1500 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. ஆனால் இன்று காலை சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. தற்போது அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குகூட தயாராக இல்லாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பயிர்கள் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தகூடும் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தடுக்க நேற்று இரவு முதலே விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜீ. ஷியாவுல்ஹக் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட போலீசார் வளையமாதேவியிலிருந்து சேத்தியாதோப்பு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதை அறிந்த விவசாய நிலத்தின் விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாய நிலத்திற்கு அனுமதிக்காமல் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

சரியான முறையில் பணம் வழங்காமல் விவசாய நிலத்தை எந்தவித அறிவிப்புமின்றி காலை முதலே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அளிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த மாதமே நாங்கள் அறிவித்தோம் என்று கூறினர். இதனால் என்.எல்.சி அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்டு உரிய முறையில் இழப்பீடு பணம் பெறாத விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் எந்திரம், தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மேல்வளையமாதேவி பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News