கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் இ-சேவை மைய குறியீடு முடக்கம்
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது.
- இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக அருகில் இயங்கி வரும் தனியாா் இ-சேவை மையத்தில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் வந்தது. இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் குழு திடீா் ஆய்வு செய்ததில் முதியோா் ஓய்வூதியத் திட்டம் சாா்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மையத்தின் பயனாளா் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட இ-சேவை மைய அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251997 மூலமாகவோ புகாா்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.