சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
- பட்டாசு ஆலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளார்கள்.
- பன்னீர்செல்வம் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளார்கள்.
கடந்த 9-ந் தேதி இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்க மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த முத்து முருகன், மாரியப்பன் ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
மேலும் விபத்தில் சிக்கிய சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகவேல், மேலாளர் பன்னீர்செல்வம், போர் மேன் குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் பன்னீர்செல்வம் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அதிகாலை சங்கரவேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.