சாரல் மழையுடன் ரம்யமான சூழல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
- மாலை நேரத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
முயல்பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் இதமான வெயில் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.