உள்ளூர் செய்திகள் (District)

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.

கருவேலம்பாடியில் தார்சாலை அமைக்க வலியுறுத்தி சுய உதவிக்குழுவினர் கோரிக்கை : கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு

Published On 2023-02-28 08:41 GMT   |   Update On 2023-02-28 08:41 GMT
  • கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
  • உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி:

கருவேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே கருவேலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை 2.5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சாலையில் கர்ப்பிணி பெண்கள், ஊனமுற்றோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் ஜல்லி மண் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மண் சாலை அமைத்தால் மழைக்காலங்களில் மீண்டும் பொதுமக்கள அவதியுறும் நிலை ஏற்படும். எனவே இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும். கொடுந்துறையில் இருந்து கருவேலம்பாடி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்றாலோ அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றாலோ வனத்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர்  எனவே மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தரவும், அந்தப் பகுதியில் சாலையோர பணிகள் நடைபெறும் போது வனத்துறையினர் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News