கொங்கண சித்தர் கோவில் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை- சித்ரா பௌர்ணமி வழிபாட்டில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
- வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
- கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் கடந்த 1½ மாதமாக சிறுத்தை பதுங்கியிருந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
ஒரு மாதத்திற்கு மேலாக சிறுத்தை பிடிக்கப்படாத நிலையில் ஊதியூர் பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுத்தையை பிடிப்பதற்கான தொடர் முயற்சியில் வனத்துறை சார்பில் 20 வனத்துறை பணியாளர்கள் , 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 3 பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேமராக்கள், கூண்டுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் சிறுத்தை பிடிபடவில்லை.
மேலும் சிறுத்தை மலையடிவார பகுதியில் பதுங்கி உள்ளதா அல்லது இடம் பெயர்ந்து சென்று விட்டதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வனத்துறை பணியாளர்கள் நேற்று ஊதியூர் மலைப்பகுதியில் ரோந்து சென்ற போது கொங்கண சித்தர் குகை அருகே சிறுத்தை அமர்ந்துள்ளதை பார்த்தனர். அப்பகுதியில் குரங்குகள் அதிகமிருப்பதால் அவற்றை வேட்டையாட வந்திருக்கும் என தெரிகிறது.
கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தை ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி கொங்கண சித்தர் குகை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட செல்வார்கள். சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.