குருந்தமலை கோவிலில் குவிந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து வழிபாடு
- ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்த மலை யில் குழந்தை வேலா யுதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர் பவனி நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷே கங்களும், அலங்காரமும் செய்யப்பட்டன. தொடர்ந்து சனிக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவமானது கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழாவையொட்டி தேர்திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். தேக்கம்பட்டி, மருதூர், புங்கம்பாளையம், காரமடை, மங்களக்கரை புதூர் உள்ளிட்ட கிரா மங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.