உள்ளூர் செய்திகள்

நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தாராபுரம் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

Published On 2023-02-15 03:46 GMT   |   Update On 2023-02-15 03:46 GMT
  • தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து உடுமலை, தாராபுரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த ஆறு கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இணைகிறது.

பழமை வாய்ந்த அமராவதி ஆற்றில் அலங்கியம் சாலையில் சீத்தக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினசரி குளிப்பதும், பெண்கள் துணி துவைப்பதும் அத்துடன் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி விளையாடி வருவதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளதாக ஒரு சிலர் கூறி வந்தனர். அதன்படி திடீரென சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்ததை சிலர் படம்பிடித்து வாட்ஸ்-அப்பிலும், சமூக வலை தளத்திலும் பதிவிறக்கம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்து உள்ளனர்.

தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றில் துணி துவைக்க சென்றார்.அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தது. அந்த பெண் உடனே தனது கையில் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார். பிறகு அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது விஸ்வரூமமாக பரவியது.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர் உந்தும் தடுப்பணை இடத்திலும் முதலை தென்பட்டதாக அப்பகுதிக்கு துணி துவைக்க சென்ற பெண் ஒருவர் ராட்சத முதலையை கண்ட காட்சியும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினர் முதலைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தினர். இந்தநிலையில் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

Tags:    

Similar News