குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்
- உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
- திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.