திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு: ஊர்வலத்துக்கு கட்டுப்பாடு
- இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் மற்றும் சிலை அமைப்பு இயக்கத்தினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் விநாயகர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிப்பட்ட தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.
ஊர்வலம் செல்லும் பாதையில் எந்தவொரு இடத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலத்தை இடைநிறுத்தம் செய்யாமல், விரைந்து நடத்தி சிலை கரைக்கும் இடம் சென்று சேர வேண்டும்.
ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஊர்வலத்தில் அரசியல் கோஷங்கள், பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.
சிலைகளை கரைக்க கொண்டு செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.
3 சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விசர்ஜன நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.
மேலும் விநாயகர் சிலை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு 10 மணி வரை சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலை கரைக்கப்படும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாலத்தின் கைப்பிடி சுவர் பகுதிக்கு சென்றுவிடாதபடி சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிலை கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியவாறு மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரும் வாகனத்தை மேடையின் அருகே திருப்பி நிறுத்தி, சிலையை அந்த மேடைக்கு மாற்றி, அங்கிருந்து காவிரி ஆற்றில் கரைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
மேலும் விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, போக்குவரத்து வழித்தடங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புத்தாநத்தம் இடையபட்டி விநாயகர் குளத்தில் 17 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.
பதட்டமான பகுதிகளாக கருதப்படும் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் ஆகிய போலீஸ் சரகத்துக்கு உட் பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.
மேலும் ஊர்வலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புத்தாநத்தம் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து புத்தாநத்தம் பஜார், ஜும்மா மசூதி வழியாக ஊர்வலமாக சென்று அந்தக் குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.
இதையடுத்து அங்கே 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.