நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தி.மு.க. கவுன்சிலர் கடையை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரி
- கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர்.
- வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் அருகே ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதன் பழக்கடையும் உள்ளது. தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனின் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பதற்காக இன்று காலையில் சென்றனர். தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர். கடையை இடிப்பதற்காக வந்த நகரமைப்பு அலுவலர் முரளியிடம், மஞ்சக்குப்பம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக எப்படி கூறுகிறீர்கள்? இடிப்பதற்கு யார் உங்களுக்கு அனுமதி அளித்தனர்? ஒரு சிலருக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் கடையை இடிப்ப தற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வந்தது குறித்து தெரிவித்தனர். உடனடியாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கி இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். குறிப்பிட்ட கடைகளை மட்டும் இடிக்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை கண்டறிந்து அகற்றப்பட உள்ளோம். தற்போது இந்த நடவடி க்கையை நெடுஞ்சாலைத் துறை எடுக்கவில்லை. வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவ ட்டமாக தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதற்கான உள்நோக்கம் என்ன? அதுவும் ஒரு கடையை மட்டும் இடிப்பதற்கு ஏன் வந்து உள்ளீர்கள்? என்று மீண்டும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாநகராட்சி யை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.