உள்ளூர் செய்திகள்

மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்... நோயாளிகள் அவதி

Published On 2024-11-14 06:32 GMT   |   Update On 2024-11-14 06:32 GMT
  • போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
  • நோயாளிகள் எங்கு செல்வது என தெரியாமல் கடும் அவதியடைந்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை அரசு மரு த்துவர் பாலாஜி தாக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


ஈரோடு

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 400 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,200 மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்த விவரம் ஆஸ்பத்திரி முன்பு உள்ள போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.


சேலம்:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பழைய டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் அருள் தலைமையில் நடைபெற்றது.


புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு முன்பு டாக்டர்கள் திரண்டு தர்ணா நடத்தினர் . புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் 300-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் டாக்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டியும், மருத்துவ மனைகளை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டியும் மற்றும் தேசிய மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டியும் இந்த போராட்டம் நடைபெற்றது.


தேனி

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள சுமார் 500 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்படுவதாகவும், 700 டாக்டர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் புறநோயாளிகள் பிரிவு இன்று செயல்பட வில்லை. இதனால் மருத்துவம் பார்க்க வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு சீட்டு எழுதும் இடம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் நோயாளிகள் எங்கு செல்வது என தெரியாமல் அவதியடைந்தனர். போடி அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில் அங்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட வில்லை.

கை, கால் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் கூட தங்களுக்கு சிகிச்சை பெற முடியவில்லையே என கண்ணீருடன் திரும்பிச் சென்றனர். ஆஸ்பத்திரி முன்பு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் பெரியகுளம், தேவதானப்பட்டி, கம்பம் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை முதல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று காலை புறநோயாளிகள் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில், கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு மற்றும் நிர்வாக மருத்துவர்கள், புறநோயாளிகள் பிரிவு நுழைவாயிலில் மருத்துவம் பார்த்தனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவம் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 3,500 வெளிநோயாளிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அறியாத நோயாளிகள் மருத்துவமனை வந்து சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், அரசு டாக்டரை கத்தியால் குத்திய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மருத்துவமனை முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் கொடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் மூலம் தாக்குதல் நடத்திய நபர் மீது சட்டம் 48/2008 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தரவேண்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News