திருப்பூரில் போதை பொருட்கள் விற்பனை: 5 கடைகளுக்கு `சீல்'
- ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.