உள்ளூர் செய்திகள் (District)

போதையில் வாகனம் ஓட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டாதவர்களின் வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-04-11 08:57 GMT   |   Update On 2023-04-11 08:57 GMT
  • பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
  • போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னை:

சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இப்படி போதையில் சிக்குபவர்களில் பலர் அபராதத்தை கட்டாமல் ரசீதை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள்.

இதுபோன்று அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அபராதம் கட்ட வைப்பதற்காக போலீசார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குடிமகன்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்க திட்டமிட்டு அதை நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதத்துக்கு பயந்து பலர் மது குடித்த பின்னர் வாகனங்களை ஓட்டுவதில்லை.

அதே நேரத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்று போதையில் வாகனம் ஓட்டி அபராதம் கட்டாமல் 8119 பேர் போலீசாரை ஏமாற்றி வருகிறார்கள்.

இதுபோன்ற நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராத தொகையை வசூலிக்க போலீசார் கோர்ட்டு வரை சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவுகளையும் வாங்கி வைத்துள்ளனர். சென்னையில் 361 பேருக்கு எதிராக இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவர்களது அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்று அபராதம் கட்டாமல் தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் அனைவரது வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாதவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மையங்களை ஏற்படுத்தி போலீசார் அபராத வசூலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்களில் இந்த அழைப்பு மையங்கள் மூலமாக 8674 போதை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 97 லட்சத்து 27ஆயிரம் 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

எனவே மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தும் அனைத்து வழிகளிலும் பணத்தை செலுத்தலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News