உள்ளூர் செய்திகள்

44 மின்சார ரெயில்கள் ரத்தானதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2024-03-17 09:20 GMT   |   Update On 2024-03-17 09:20 GMT
  • இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
  • மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை:

சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News