உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2023-06-13 04:10 GMT   |   Update On 2023-06-13 05:53 GMT
  • செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் சோதனை
  • மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்கு தொடர்புடையதாக கருதப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வருமானவரித் துறையினரிடம் அடையாள அட்டையை கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது 4 அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

இதைத் தொடர்ந்து மத்திய போலீஸ் படை பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது நண்பர்கள் சங்கர், மணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் 1 வாரமாக சோதனை நீடித்தது.

இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகளுக்கு சீல் வைத்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளை தவிர அவரது உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்துதான் இவர்களது வீடுகளில் சோதனை நடந்து வருவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. நடைபயிற்சிக்காக வெளியில் சென்றிருந்தார். ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அடையாள அட்டையை காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று காத்திருந்து சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்த உதவியாளர்களிடம் செந்தில் பாலாஜிக்கு தகவல் தெரிவித்து வரவழையுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். உடனே உதவியாளர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தகவல் கொடுத்தனர். அவர் நடைபயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக நடந்து வந்தார்.

அப்போது அவரை நிருபர்கள் வழிமறித்து கேட்டதற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளனர்? எதை தேடுவதற்காக வந்திருக்கிறார்கள்? என தெரியவில்லை.

அவர்களின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். என்ன விளக்கம் கேட்டாலும் நாங்கள் பதில் சொல்ல தயார்.

எனக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். சோதனை முடிந்ததும் நான் விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

செந்தில் பாலாஜி வந்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதே நேரத்தில் ஆர்.ஏ.புரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள விஸ்வநாதன் டெல்பி ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில் அசோக்குமார் தங்கி இருந்த வீட்டிலும், அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள ஸ்ரீபதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடையார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை கேள்விப்பட்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் அங்கு குவிந்தனர்.

பதட்டம் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசாரும் அங்கு வந்திருந்து நிலைமையை கண்காணித்தனர்.

கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அந்த அதிகாரிகள் முற்றுகையிடப்பட்டனர். அதிகாரிகளின் கார் சேதப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்படை பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் தொடர் சோதனை நடத்தினர்.

பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். இதையடுத்து வழக்கறிஞர் மூலம் அதிகாரிகளுக்கு அவர்கள் கேட்ட விபரங்களை கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மண்மங்கலம் ராமேஸ்வரபட்டி பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, ஈரோடு சாலை கோதூரில் உள்ள ஆடிட்டர் வீடு,

கொங்கு மெஸ் சுப்பிரமணி வீடு மற்றும் வெங்கமேட்டில் உள்ள ஒருவர் வீடு என மொத்தம் 5 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிகாரிகள் அனைவரும் கேரள பதிவு எண் கொண்ட கார்களில் வந்துள்ளனர். சோதனையில் மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் மேற்கண்ட சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News