மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கியது- ஓ.பன்னீர்செல்வத்தை வெல்ல எடப்பாடி பழனிசாமி வியூகம்
- ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.
- அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்துள்ளன.
இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் அவரை முழுமனதோடு வரவேற்று அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறையே என்று வர்ணித்து பின்னால் அணிவகுத்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாகவே மாறி இருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது அரசியல் களத்தில் மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துள்ள ஓ.பி.எஸ். சசிகலாவையும் சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.
ஆனால் அவரது இந்த அறிவிப்பை சசிகலா தரப்பினரோ ரசிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.
இப்படி சசிகலாவிடமிருந்து 'கிரீன் சிக்னல்' கிடைக்காத நிலையில் எந்த வழியாக பயணிப்பது? என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவியாய் தவித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான சண்முகத்தில் தொடங்கி வைரமுத்து, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் என 6 பேர் வரை வழக்கு போட்டனர்.
இந்த வழக்குகள் எல்லாம் பல்வேறு கால கட்டங்களில் 10 முறைக்கு மேல் கீழ்கோர்ட்டு முதல் மேல் கோர்ட்டு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி 9 முறை நடைபெற்ற வழக்கு விசாரணைகள் அனைத்திலுமே எடப்பாடியே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஓ.பி.எஸ்.சின் சட்டப்போராட்டங்களை தவிடு பொடியாக்கியுள்ளார்.
இதனால் ஓ.பி.எஸ்.சுக்கு அ.தி.மு.க. விவகாரத்தில் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து வந்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிரான கடைசி வாய்ப்பாக ஓ.பி.எஸ்.சுக்கு இருப்பது ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமேயாகும்.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கிலும் ஓ.பி.எஸ்.சை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்களுடன் அவர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தொடங்கி, ராயப்பேட்டையில் தலைமைக்கழகம் தாக்கப்பட்ட விவகாரம் வரை அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்று சாதித்து காட்டி இருக்கிறார்.
அதே பாணியில் ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள இந்த கடைசி வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். உடனான இறுதி மோதல் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்களில் தொடங்கி அனைத்து பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.