உள்ளூர் செய்திகள் (District)

காரமடை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

Published On 2023-02-28 10:23 GMT   |   Update On 2023-02-28 10:23 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11.10 மணிக்கு கொடி ஏற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு 8.30 மணிக்கு அன்னவாகன உற்சவம் நடக்கிறது. நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை தினசரி இரவு 8.30 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், அறுபத்து வாகன உற்சவமும், வெள்ளிக்கிழமை கருட சேவையும் நடக்கிறது.

4-ந் தேதி காலை 10.45 மணிக்கு பெட்டத்தம்மன் அழைப்பு புறப்பாடு நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

இரவு 8.30 மணிக்கு யானை வாகன உற்சவம் நடக்கிறது.

6-ந் தேதி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

7, 8-ந் தேதிகளில் பரிவேட்டையுடன் குதிரை வாகன உற்சவமும், தெப்போற்சவமும் மற்றும் சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி சந்தான சேவை நடக்கிறது. 10-ந் தேதி காலை 9 மணிக்கு வசந்தம் நடக்கிறது. 

Tags:    

Similar News