உள்ளூர் செய்திகள்

கதவை உடைத்து குட்டியுடன் வீட்டுக்குள் புகுந்த யானை: வீடியோ வைரல்

Published On 2024-11-01 07:35 GMT   |   Update On 2024-11-01 07:35 GMT
  • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
  • யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

வடவள்ளி:

கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவு தேடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் யானை ஒன்று தனது குட்டியுடன் புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த அலங்கார தாவரங்களை ருசித்து சாப்பிட்டது.

பின்னர் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்பக்கமாக தும்பிக்கையை விட்டு உணவு தேடியது.

சத்தம் கேட்டு அந்த வீட்டில் வசித்தவர்கள் அலறி அடித்து மாடிக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர். சிறிது நேரம் வாசலில் நின்ற யானைகள் உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறிச் சென்றன.

யானைகள் வந்து சென்ற வீடியோக்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருதமலை ஐ.ஓ.பி காலனி பகுதியில் அவ்வப்போது யானைகள் நள்ளிரவில் உலா வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் வருவதை தடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News