சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
- கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, கெட்டவாடி, ஜீரகள்ளி, கடம்பூர், மெட்டல்வாடி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும், மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இன்று காலை பண்ணாரி சாலையில் காட்டு பண்ணாரி என்ற இடத்தில் வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் தீபக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். மொத்தம் இந்த பணியில் 76 பேர் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று பரப்பளவு வாரியாகவும், நாளை நேர்கோட்டு பாதையிலும், நாளை மறுநாள் நீர்நிலைகளில் இருக்கும் யானைகளும் கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 866 யானைகள் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? என்று தெரிய வரும்.