அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் யானைகள் புகுந்து அட்டகாசம்
- யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறு வடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.
- நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தி யதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர்காப்பு காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய 2 யானைகள் குடியூர், கூச்சுவாடி, நெல்லுகுந்தி, அரசச்சூர், சித்தலிங்ககொட்டாய் ஆகிய வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்தன. பின்னர் இந்த யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.
தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பலாப் பழங்களை தின்றும், காய்களை பறித்து கீழே போட்டும் சென்றன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளால் சேதமடைந்த வயல் மற்றும் மரங்களை பார்வையிட்டனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.