உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

காலி மதுபாட்டில் திரும்பபெறும் நடைமுறையால் பாதிப்பு என்ற கருத்து

Published On 2022-06-15 05:03 GMT   |   Update On 2022-06-15 05:03 GMT
  • கொடைக்கானலில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறத்தல்
  • காலி மதுபாட்டில் திரும்பபெறும் நடைமுறையில் சிக்கல்

கொடைக்கானல் :

தமிழகத்தில் உள்ள கோடைவாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் நடைமுறையை கடைபிடிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானலில் இன்று முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வருவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் தாலுகாவில் இயங்கி வரும் 9 டாஸ்மாக் கடை மற்றும் ஆடலூரில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடை ஆகிய 10 கடைகளில் மதுபானங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும். மதுபானத்தை வாங்கி உபயோகித்தபின் அதற்கான பாட்டிலை மீண்டும் கடையில் கொடுத்து ரூ.10-ஐ பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ெகாடைக்கானல் பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் தெரிவிக்கையில், காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் நடைமுறை 100 சதவீதம் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே. ஒரு சில குடிமகன்கள் மட்டுமே இதனை திரும்ப ஒப்படைப்பார்கள். ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட நிர்வாகமே கூடுதலாக ரூ.10 வசூலிக்க சொல்வதால் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்குதான் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை வாங்கி கொண்டு லாட்ஜ் மற்றும் விடுதிக்கு சென்றுவிடுவார்கள். அவர்கள் காலி மதுபாட்டிலை காரில் வந்து மீண்டும் எப்படி ஒப்படைப்பார்கள் என்றனர்.

கொடைக்கானலை சேர்ந்த சமூகஆர்வலர்கள் தெரிவிக்கையில், இயற்கை சார்ந்த கொடைக்கானலில் மதுபான விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும். குறைந்த பட்சம் நகர் பகுதியில் உள்ள கடைகளை குறைத்து மலைகிராமங்களில் செயல்படும் கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும்.

ஏனெனில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை வாங்கி கொண்டு சுற்றுலா இடங்களுக்கு சென்று மதுபானங்களை பயன்படுத்தி பாட்டிலை தூக்கி வீசிவிடுகின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து அவர்களுக்கு தெரியாது. எனவே ஐகோர்ட்டு எந்த நல்லெண்ணத்திற்காக இந்த நடவடிக்கையை நடைமுறைபடுத்தியதோ அது முழுமையாக சாத்தியப்பட வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை குறைத்தோ அல்லது அகற்றியோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News