கூவம், பக்கிங்காம் ஆறுகளில் அடுத்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது.
- வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது.
சென்னை:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளக்காடானது. சென்னையில் பெரும்பாலான இடங்கள் சுமார் ஒரு வாரம் வரை வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.
இதேபோல் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போதும், சென்னையில் வெள்ள பாதிப்பு தவிர்க்க முடியாததாக தொடர்ந்து வருகிறது. எனவே சென்னையில், தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டிடங்களும் உள்ளன. வீடுகள், சிறு தொழிற்சாலைகள், உணவு விடுதிகள ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளன. சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்க இதுபோன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாகும். ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளம் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதற்கிடையே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
சென்னையில், பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் திரும்ப பெறப்பட்டதும் ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.