உள்ளூர் செய்திகள்

ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர்

Published On 2022-09-19 02:34 GMT   |   Update On 2022-09-19 02:34 GMT
  • தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்துள்ளது.

ஆலந்தூர் :

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 175-வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் பழைய மழைநீர் வடிகால்கள் உடைக்கப்பட்டு புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கக்கன் நகர் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அடிப்பகுதியில் இரும்பு கம்பிகள் கட்டி, சிமெண்டு ஜல்லிக்கலவை போடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 33). என்ஜினீயரான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டு வாசலிலும் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திறந்த வெளியில் விடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து விட்டார். அப்போது மழைநீர் கால்வாய் பணிக்காக போடப்பட்டு இருந்த இரும்பு கம்பி குத்தியதில் அவரது தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்தது. படுகாயம் அடைந்த வாசுதேவன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரும்பு கம்பி குத்திய இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மழைநீர் கால்வாய் பள்ளத்தில் வாசுதேவன் தவறி விழுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News