உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.

களக்காட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்-திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2023-09-02 09:28 GMT   |   Update On 2023-09-02 09:28 GMT
  • நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
  • இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதையொட்டி கிறிஸ்தவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை களக்காடு சேகரகுரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் பச்சை நிற ஆடை அணிந்து அணிவகுத்து சென்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த முழக்கங்கள் எழுப்பியவாறு கைகளில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சென்றனர்.

மரக்கன்றுகள் நடப்பட்டது

இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து களக்காடு அண்ணா சாலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. முன்னதாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை வந்தடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. சேகர குரு சந்திரகுமார் நன்றி கூறினார். ஸ்தோத்திர பண்டிகை நாளை (3-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.

Tags:    

Similar News