உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2023-07-11 09:40 GMT   |   Update On 2023-07-11 09:40 GMT
  • தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
  • கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை நிலையம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.

கடந்த சில நாட்களாக தரமான மஞ்சள் வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-

கடந்த வாரம் மஞ்சள் விலை குவிண்டால் 9,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மேலும் 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விரலி மஞ்சள் 6,206 முதல் 9,589 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 6,089 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் தரமான பெருவட்டு மஞ்சள் ஒரு குவிண்டால் 10,286 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மஹராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்து காணப்படுகிறது.

இதனால் தற்போது மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் வரத்து அங்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதிய பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் மஞ்சள் நடவும் குறைந்துள்ளது.

ஓராண்டு பயிராக மஞ்சள் இருப்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

தவிர 'என்.சி.டெக்ஸ்' ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆகஸ்ட் மாத டெலிவரி விலை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டது.

தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

தேசிய அளவில் அனைத்து பகுதியிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் வடமாநில தேவைகளுக்காக ஈரோடு மார்க்கெட்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

மஹராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு முழுமையாக தெரியும் வரை எதிர்ப்பு அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் கூடுதல் விலையுடன் அதிகமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News