உள்ளூர் செய்திகள்

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை தெங்குமரஹடா வனப்பகுதியில் விடப்பட்டது

Published On 2022-07-01 07:48 GMT   |   Update On 2022-07-01 07:48 GMT
  • ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
  • சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.

மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.

சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.

தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.

பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.

இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News