சின்னமாரியம்மன் கோவில் குண்டம்-தேர் திருவிழா
- குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
- சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
குண்டம் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து குண்டத்துக்கு தேவையான விறகுகளை மாரியம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பற்றவைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் குண்டம் இறங்க அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொடர்ந்து இன்று தேர் வடம் பிடித்து இழுத்தலும், கோவில் கரகம் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தலும், அதனை தொடர்ந்து கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.