சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழைமரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
- பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலை யில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர்-பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனையடுத்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பர்கூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.