பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சித்தோடு:
சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.
எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.