உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தை வெளிமாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடியது

Published On 2022-06-21 09:21 GMT   |   Update On 2022-06-21 09:21 GMT
  • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
  • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

Tags:    

Similar News