கோடைகாலம் தொடங்கும் முன்பே ஈரோடு மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி
- வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
- குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.
இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.