- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலுமணி. இவர் இடுவம்பாளையம் செல்லும் வழியில் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்காக பின்னலாடை உற்பத்திக்கு பயன்படக்கூடிய சிங்கர், ஓவர்லாக், பேட்லாக் தையல் எந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவனம் பூட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. நிறுவனம் முழுவதும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த 200 தையல் எந்திரங்கள், நூல் பண்டல்கள், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த டீசர்ட்டுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.