உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் நகரில் கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை2 வாலிபர்கள் சரண்

Published On 2023-07-28 09:41 GMT   |   Update On 2023-07-28 09:41 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர்.
  • ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடுகு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (வயது 35). இவர் உண்டியலை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் கஜேந்திரன் (21), மூர்த்தி மகன் கணேசன் (26) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர். இதில் கைகளில் கத்தி வெட்டு காயங்களுடன் ராமு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராமு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தில்லைக் காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்த ராமு, ஒரு ஓட்டலில் அமர்ந்து டிபன் சாப்பிட்டார். இதனை அறிந்து வந்த கஜேந்திரன், கணேசன் ஆகியோர் ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். இதில் நிலை குலைந்த ராமு, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீசார் விரைந்து சென்றனர். கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராமுவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது,

Tags:    

Similar News