வருசநாட்டில் சேதமடைந்த சாலையால் விவசாயிகள் அவதி!
- கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.
- பொதுமக்கள் விளை பொருட்களை தலைசுமையாகவோ, மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசணியூத்து, முத்தூத்து, தேக்கிளைகுடிசை, திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பயிர்கள் ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இந்தநிலையில், இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களுக்கான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறி உள்ளது.
இதனால் ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலை வழியாக இயக்க முடியவில்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விளை பொருட்களை சிங்கராஜபுரம் கிராமம் வரை தலைசுமையாகவோ அல்லது மாட்டு வண்டிகளிலோ எடுத்து வந்து அதன் பின்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதனால் நேர விரையம் ஏற்பட்டு விளை பொருட்களை உரிய நேரத்திற்கு சந்தைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.