வடமதுரை: விலை கிடைக்காததால் தக்காளியை செடியிலேயே விடும் அவலம்!
- விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
அய்யலூரில் தக்காளிக்கென இயங்கும் தனி மார்க்கெட்டில் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து சென்னை, தஞ்சை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தற்போது விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் தக்காளி வரத்து உள்ளது. ஆனால் அங்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செய்த செலவிற்கு கூட பணம் கிடைக்க வில்லை. பெரும்பாலான விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். ஒருசிலர் தாங்களே பறிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்கள் மூலம் கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இருந்தபோதும் நிரந்தர விலை இல்லாததால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது.