ஆழியாறு அணை விநாயகர் கோவிலில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் யாகம்
- தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம்.
- ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.
பொள்ளாச்சி,
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டு ஜூலை முதல் வாரமாகியும், இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்கா ததால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் பருவ மழையை பயன்படுத்தி நடைபெறும் விவசாய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மேலும், வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை. நேற்று காலை நிலவரப்படி 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 19.05 அடியாகவும்,120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை யால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது, அணைப்பகுதி தண்ணீர் இன்றி மண் திட்டுகளாகவும், பாறை முகடுகளாகவும் காட்சியளிக்கிறது. மழைப்பொழிவு இன்றி விவசாயம் பொய்த்துவிடும் சூழல் ஏற்படாமல் இருக்கவும், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர வேண்டியும் ஆழியாறு அணையின் மீது உள்ள விநாயகர் கோவிலில் விவசாயிகள் கணபதி யாகம் நடத்தினர்.
ஆழியாறு அணை உதவி செயற்பொறியாளர் சிங்கார வேல், உதவிப் பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.