அரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
- தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
இதில் விவசாயிகளின் அனைத்து உற்பத்திப ்பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3ஆயிரம், சின்ன வெங்காயம் டன்னுக்கு ரூ. 45 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரம், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ. 12ஆயிரம், மஞ்சள் குவிண்டலுக்கு ரூ. 15ஆயிரம் என்ற விலையை நிர்ணயிக்க வேண்டும்.
தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உதயகுமாரன், மாநில கரும்பு விவசாயிகள் அணி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.