செல்போன் டவரில் ஏறி விவசாயி திடீர் போராட்டம்
- சக்கராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை நீண்ட காலமாக குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார்.
- லட்சுமணன் டவரை விட்டு இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அய்யம்பேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பெருமாக்கநல்லூர் தென்னங்குடியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது49) விவசாயி.
இவர் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை நீண்ட காலமாக குத்தகைக்கு சாகுபடி செய்து வந்தார். இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் லெட்சுமணனிடமே நிலத்தை விற்பதாக கூறி ரூ.13 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் அதே நிலத்தை இன்னொருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விவசாய நிலத்தை மீண்டும் எனக்கே தர வேண்டும். இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய ரூ.13 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறி இன்று காலை லெட்சுமணன் அய்யம்பேட்டை சாவடி பஜார் அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் டவர் மீது திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா தலைமையிலான போலீசார் கீழே இருந்தவாறு ஒலிப்பெருக்கி மூலம் லட்சுமணனணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிலத்தை குத்தகைக்கு விட்டு பணத்தை பெற்ற உரிமையாளர் நேரில் வந்தால் மட்டுமே டவரை விட்டு கீழே இறங்குவேன் என்று கூறி லட்சுமணன் டவரை விட்டு இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.