விளைபொருட்களை கொண்டு செல்ல அதிகாலையில் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்
- கால்வாய் கரைகளிலுள்ள மின் இணைப்புகள் சட்ட விரோதமாக துண்டிக்கப்படுகிறது.
- விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர முடிவதில்லை.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது:-
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, கால்வாய் கரைகளிலுள்ள மின் இணைப்புகள் சட்ட விரோதமாக துண்டிக்கப்படுகிறது.
உடுமலை பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி பகுதிகளில், ஆடு, மாடுகளை மர்ம விலங்குகள் கடித்து வருகிறது. கடந்த, ஒரு மாதத்தில்,நூற்றுக்கணக்கான ஆடுகள் கடித்து குதறப்பட்டு பலியாகியுள்ளன.வனத்துறையினர் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சுற்றி வருவதாகவும், அவைதான் காரணம் என்கின்றனர். அவற்றை கட்டுப்படுத்தவும், பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த, அரசு பஸ்கள், நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர முடிவதில்லை.கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்தஅரசு பஸ்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கிராம விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.