உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2023-02-15 09:11 GMT   |   Update On 2023-02-15 09:11 GMT
  • உதவி தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
  • போதுமான அளவு குளோரின் மருந்து கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலக துணை இயக்குனரிடம் கலந்து ஆலோசனை செய்து மக்களைத்தேடி மருத்துவம் வாகனங்கள் மூலம் கிருஷ்ணாபுரம் மற்றும் மேலக கடையநல்லூர் பகுதிகளில் தனித்தனியே மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படு பவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பணியாளர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பள்ளிகளிலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொறியியல் பிரிவு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரில் போதுமான அளவு குளோரின் மருந்து கலந்திட உத்தரவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு நகராட்சி மேலக்கடையநல்லூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நகர் எங்கும் முதிர் கொசுக்களை ஒழிக்க புகை மருந்தும், வாறுகால்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தும், அனைத்து வார்டுகளிலும் தங்கு தடையின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் காய்ச்சல் கண்ட விவரத்தினை நகராட்சி பொது சுகாதார பிரிவிலும், கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலக்கடைய நல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தெரிவித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News