தேசிய கூடைபந்து போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு நிதி உதவி- வேப்பிலான்குளம் பஞ்சாயத்து தலைவர் வழங்கினார்
- ஜெயசெல்வன் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
- பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தனது 5 மாத ஊதியத்தை ஜெயசெல்வனுக்கு வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலான்குளம் பஞ்சாயத்து சுண்டவளை கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல், சமையல் தொழிலாளி. இவரது மகன் ஜெயசெல்வன் (வயது 20).
மாற்றுத்திறனாளியான இவர் சென்னை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த மாதம் மாநில அளவில் ஈரோட்டில் நடந்த கூடைப்பந்து போட்டி யில் இவரது குழுவினர் முதலிடம் பிடித்தனர்.
இதைதொடர்ந்து தேசிய அளவில் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தனது குழுவினருடன் கலந்து கொண்டு 2-ம்இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த ஜெய செல்வனை பாராட்டிய வேப்பிலான் குளம் பஞ்சயத்து தலைவர் வேல்முருகன் அவருக்கு தனது 5 மாத ஊதியத்தை காசோலையாக வழங்கினார். வெற்றிபெற்றது குறித்து ஜெயசெல்வன் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியை எனக்கு யாரேனும் வழங்கினால் உலக அளவில் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் மாண்பினை தலை நிமிர செய்வேன் என்றார்.