வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின் கட்டுப்பாட்டு அறையில் தீ
- மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மின் உபகரணங்கள் முழுவதும் தீப்பற்றியது.
- விபத்தில் காயம் அடைந்த ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர் சந்தோஷ் என்பவர் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஒயர்கள் திடீரென உரசி தீப்பற்றியது. இதனால் மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மின் உபகரணங்கள் முழுவதும் தீப்பற்றியது.
சந்தோஷ் மீதும் தீ பற்றியது. அந்த நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
மின் ஊழியர் மீது பற்றி எரிந்த தீயை சக ஊழியர்கள் அனைத்தனர். பயங்கர சத்தத்துடன் மின் உபகரணங்கள் தீப்பற்றியதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.
மேலும் அந்த நேரத்தில் பி பிளாக் கட்டிடத்தில் லிப்டில் 9 பேர் கீழே வந்து கொண்டிருந்தனர்.
மின்தடையால் லிப்ட் பாதியிலேயே நின்றது. இதனால் லிப்டில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தவித்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லிப்டில் சிக்கி தவித்த 9 பேரை அங்கிருந்த ஊழியர்கள் லாவகமாக மீட்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.